பார்ப்பன கட்சிகளாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

"பணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்" என்ற தலைப்பில் அய்யா பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கம்.


நம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.

இன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது? அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே!

இன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.

இதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே! அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது? இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.

இது மாத்திரமா? தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே! அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்? என்று கேட்கிறேன்.

சராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்!

மக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.

(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

No comments: