வர்க்கத்தைக் கூறுபோடும் சாதி- தஞ்சை மாநாட்டில் வழக்கறிஞர் பானுமதி உரை!!

“உலக நாடுகளில் உள்ளது தொழில் பிரிவினைதான்; இந்த நாட்டில்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது” என்று வழக்கறிஞர் பானுமதி மே.19 இல் தஞ்சையில் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். அவரது உரை:

அன்றைக்கு சம்பூகனை கொலை செய்தான் இராமன். இன்றைக்கு பூணூலை அறுத்ததற்காக நமது தோழர்களை கைது செய்திருக்கிறது இந்த அரசாங்கம். இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தால் இந்த சாதீய அமைப்பிற்கு பார்ப்பனீயத் திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்திருந்தால் இப்படி தேசப் பாதுகாப்பு சட்டம் என்பது பாயும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதியை ஒழிப்பது என்பது ஏதோ சாதாரண விசயம் இல்லைங்க. பல பேர் சொல்லுவாங்க சாதி எல்லாம் நில பிரபுத்துவ காலத்து மிச்ச சொச்சங்கள். அந்த நில பிரபுத்துவ காலம் முடிந்தாகிவிட்டது. பண்ணை அடிமை முறை முடிந்தாகிவிட்டது. எங்கங்க இருக்கு சாதி? என்று கேட்பவர்களும் உண்டு. எல்லா நாட்டி லும் நிலபிரபுத்துவ ஆட்சி ஒழிந்தது. முதலாளித்துவ ஆட்சி மலர்ந்தது. சாதிகள் ஒழிந்துவிட்டன என்று கூறினார்கள். அதை பொய் என்கிறார் அம்பேத்கர். சாதியையும் தொழிலோடு ஒப்பிட்டு, அது ஒரு தொழில் முறை. தொழில் பிரிவு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் மட்டும் அல்ல என்று கூறி சாதியத்திற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள். அதையும் பொய் என்கிறார் அம்பேத்கர். எல்லா நாட்டிலும் தொழில்களை பிரித்தார்கள், தொழிலாளர்களைப் பிரிக்கவில்லை. அது இந்தியாவில் தான் நடந்தது.

பார்ப்பனீயமும், சாதியமும் தொழிலாளர்களைப் பிரித்தது, தொழிலை வைத்து அல்ல! அதுவும் தொழி லாளர்களை எப்படிப் பிரித்தது, ஏணி அடுக்கு முறையில் யார் பெரியவன் தாழ்ந்தவன் என்று பிரித்தது. இடதுசாரி கட்சிகள் சொல்லுகிற மாதிரி பாட்டாளி வர்க்கங்கள் சம நிலையில் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்துத்துவத்தில் பாட்டாளி வர்க்கங்கள் படி நிலையில் இருக்கிறார்கள். இந்த படி நிலை மற்ற நாட்டில் உள்ளது போல் ஏதோ தொழில் அடிப்படையில் நடந்த பிரிவினை அல்ல. தொழி லாளர்களை சாதியத்தின் மூலம் பிரித்து வைத்திருக் கிறார்கள். இந்த சாதீயம் என்கின்ற அமைப்பு மட்டும் இன்று வரை இவ்வளவு தூரம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் இதற்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்க வேண்டும்.

இன்றைக்கும் அரசியலில் சாதி இல்லை என்றால் அரசியலை நடத்த முடியாது என்கின்ற சூழ்நிலை வந்தாச்சு. என்னங்க நாங்க சாதியில்லாமல் அரசியல் நடத்த முடியுமா? என்பதுதான் இன்று கேள்வி. சாதி அரசியலை வைத்து இன்றைக்கு சனநாயகம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டும் குறிப்பாக இந்த சாதீய முறை எப்படி இவ்வளவு கட்டுக் கோப்பாக இன்று வரையிலும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றது என்றால் அதைத் தான் அம்பேத்கர் சொல்கிறார், சாதி ஒரு சிறப்புத் தன்மை யானது. அது தானே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தன்னை உருமாற்றிக் கொண்டு எழுந்து நின்று கொண்டிருக் கின்றது. சில பழக்க வழக்கங்களை நாம் கைவிட் டோம் என்றால் அது அழிந்து போகும். அதே மாதிரி சாதிய பழக்கங்களை கைவிட்டால் அது அழிந்து விடும். ஆனால், இந்த சாதிய அமைப்பு முறை மட்டும் அழியாமல் இருக்கிறது. இதைத் தொடர்ச்சியாக கைப்பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதற்கு பின்னணியில் பார்ப்பனர்களின் பிடியில் இருக்கக்கூடிய வேதங்களும், சா°திரங்களும், புராணங்களும், சமய நம்பிக்கைகளும், சடங்குகளும் இருக்கின்றன. அவை அத்தனையுமே புனிதமானவை என்பதே பார்ப்பான் நமக்கு இட்ட கட்டளை. அதனாலேயே சாதியை புனிதமானது என்பதே பார்ப்பான் நமக்கு இட்ட கட்டளை. அதனால் சாதியும் புனிதமானது என்று காப்பாற்றிக் கொண் டிருக்கிறார்கள். யாராவது நீங்க எந்த சாதி என்று கேட்டால் நமக்கு அருவருப்பாக இருக்கின்றது.

நான் வழக்கறிஞராக முதன் முதலாக நீதிமன்றத்திற்கு சென்றபோது ஒரு வழக்கறிஞர் என்னை கேட்டார், நீங்க நம்மாளா எனக் கேட்டார். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டேன். அதற்கப்புறம் என்கிட்ட அவர் பேசவே இல்லை. எதை முதலில் தேடுகிறார்கள்? நம்முடைய அடை யாளம் என்ன? இவர் வழக்குரைஞரா? என்ன படித்திருக்கிறார்? என்ற கேள்வி அல்ல. இவர் எந்த சாதியச் சேர்ந்திருக்கிறார் என்ற அடையாளத்தையே தேடுகின்றார்கள். அருவருப்பாகத்தான் இருக்கிறது. சாதியத்தைச் சொல்லும்போது. ஆனால் இந்த சாதியை புனிதமானது என்று கொண்டாடிக் கொண்டு பார்ப்பான் திணித்த அந்த பண்பாட்டை இன்று வரை நாம் கடைபிடித்துக் கொண்டிருக் கிறோம். இந்த புனிதத் தன்மையை வைத்துத்தான் சாதியம் இன்றைக்கும் உயிர் பெற்றுள்ளது. கேள்விக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்ட சாதிமுறை புனிதமாக ஆக்கப்பட்டது. இந்த சாதிமுறை புனிதம் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை வந்துவிடும். அதை வணங்கவேண்டும் என நினைப்போம். காப்பாற்ற வேண்டும் என நினைப்போம். உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என நினைப் போம். பார்ப்பனீயம் என்ன கற்றுக் கொடுக்கிறது தெரியுமா? இந்தியாவிலுள்ள ஒவ்வொருவனுக்கும் உள்ள மிகப் பெரிய சொத்து என்பதே அவனுடைய சாதி என கற்றுக் கொடுத்திருக்கின்றான். எதுவுமே இல்லையென்றாலும் சாதி என்று ஒன்னு இருக்கு என்பதுதான்.

அதனால் தான், காரல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்திடம் உங்களிடமிருந்து உடைத்தெறிவதற்கு உங்கள் கையில் உள்ள விலங்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறினார். ஆனால் இந்தியா வில் இருக்கக் கூடிய ஒவ்வொரு பாட்டாளி வர்க்கத் திற்கும் தான் பெற்ற சாதி ஒரு அடையாள சொத்தாக இருக்கிறது. அதனால்தான் இன்று வரையில் அதன் கை விலங்குகளை உடைக்க முடியவில்லை என்று அம்பேத்கர் கூறினார். அந்த சாதி அடையாளத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். இந்த அடையாளத்தை ஒழுக்கம் என்கின்ற நெறியை வைத்தோ, பகுத்தறிவு என்கின்ற ஒரு தீயை வைத்தோ கொளுத்தி அழித்து விட முடியாது என்று கூறுகிறார் அம்பேத்கர்.

பகுத்தறிவு என்பது எல்லாவற்றையும் கேள்விக் குள்ளாக்குவது. பார்ப்பனீயம் என்பது கேள்வியே கேட்காதே என்பது. கேள்வியே கேட்காதே நான் சொல்வதை ஏற்றுக்கொள் என்கின்ற பார்ப் பனீயத்தை நீங்கள் பகுத்தறிவுக் கொண்டு எரிக்க முடியாது. அல்லது ஒழுக்கத்தைக் கொண்டு எரிக்க முடியாது. இது மிகப் பெரிய கற்கோட்டைப் போன்றது. இதற்கு இராணுவமாக நிற்கிறார்கள் பார்ப்பனர்கள் என்கிறார் அம்பேத்கர். இந்த இராணுவப் பாதுகாப்போடு உள்ள இந்த கற்கோட்டையை தகர்க்க வேண்டும் என்றால், அதற்கு அணுகுண்டும் பீரங்கியும் வைத்துத்தான் நீங்கள் சிதறலை உண்டாக்க வேண்டும். சாதீயம் என்ற அமைப்பை நீங்கள் உடைக்க வேண்டும் என்றால் பார்ப்பனீயம் சொல்லி வந்த வேதம், சா°திரம், சம்பிரதாயங்கள், புனிதம் என்கிற கருத்துக்களை உடைப்பதற்கு பீரங்கி போன்ற குண்டுகளைக் கொண்டு நீங்கள் துளைக்க வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கர்.
எதற்காக இதைத் தகர்க்க வேண்டும்? இருந்து விட்டுப் போகட்டுமே என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய ஆபத்து என்பதை கண்டுக் கொள்ளாத ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது இந்திய சமூகம் தான். நாம் சமூகம் என்று கூட கூற முடியாது. சமூகம் என்றால் எல்லோருடனும் ஒட்டி உறவாட வேண்டும், ஒற்றுமையோடும், சரிசமமாகவும், சகோதரத்துவடனும் நாம் வாழ்க்கை நடத்தினால் அதை ஒரு சமூகம் எனக் கூறலாம். இங்கே சமூகம் இல்லை; சாதிகளின் தனித்தனிக் கூட்டம்தான் வாழ்கிறது. தனித்தனியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு சாதியும் தனித்தனியாக இருக்கக் கூடிய ஒரு தேசம் என்று கூறுகிறார் அம்பேத்கர்.

பார்ப்பனீயமும் ஏகாதிபத்தியமும்

இந்த பார்ப்பனீயத்தை ஏகாதிபத்தியத்திற்கு இணையாக கூறுகிறார் அம்பேத்கர். ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தொடர்ச்சியாக ஒடுக்கிக் கொண்டே வந்தால், அது ஏகாதிபத்தியம்.
பார்ப்பனீயத்தை ஒரு தேசியம் என்கிறார் அம்பேத்கர். அந்த தேசியத்திற்கு அரசியல் எல்லை தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை பரப்பு தேவையில்லை. அதற்குள் தனித்தனி தேசங்களாக இருப்பதுதான் சாதிகள். நாமெல்லாம் தனித் தனி தேசங்களாக இருக்கிறோம், ஒவ்வொரு சாதியும் ஒரு தேசம். இப்படி தனித்தனி தேசங்களாக இருக்கக் கூடியவர்களை நாமெல்லம் ஒரு தனித் தனி தேசமா ஒரு சாதிக்காரனா நினைக்கிறோம் என்றால் இந்த சாதியை உடைக்கிறது எவ்வளவு பெரிய விசயம். இதை உடைத்தெறிய வேண்டும். இதிலே வசதியான ஒரு விசயம் என்ன வந்திருக்குன்னு சொன்னா, இன்றைக்கு சம காலத்தில் இந்த சாதி முறையை ஒழிக்கவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் வளர்ச்சி அடையாமல் அடிமையாகவே அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு இப்ப இருக்கக்கூடிய புதிய பொருளாதாரக் கொள்கை மூலமாக அடிமைப்பட்டு செத்துவிடுவோம் என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் பிரிவினை எது? சாதி.

சாதியும் வர்க்கமும் ஒன்றாக இருக்கிறது. பணக்கார வர்க்கம் உயர்சாதி. ஏழை தாழ்ந்த சாதி. இப்படிப்பட்ட பிரிவினைகள் இருக்கும் போது அந்நிய ஏகாதிபத்தியம் யாரை இன்றைக்கு துணையாக கொண்டிருக்கிறது. இந்தியாவில் என்றால், இந்தியாவிலுள்ள உயர்சாதி வர்க்கமாக இருக்கக்கூடிய பார்ப்பனீயத்தின் துணையோடுதான் இந்தியாவில் நுழைந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இந்தியாவில் ஏகாதிபத்தியம் ஒரு சுரண்டலை நோக்கி வரும்பொழுது அதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய பார்ப்பனியமும், அதைச் சார்ந்த உயர்சாதி வர்க்கங்களும் பிழைத்துக் கொள் வார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கங்களாக இருக்கக் கூடிய நாம் அழிந்து விடுவோம். அதாவது 40, 50 வருடத்திற்கு முன்பாக ஆப்பிரிக்க நாட்டில் இருக்கக் கூடிய மக்கள் நாம் தெருவில் இறங்கி நடப்போம் என்று கூட கற்பனைச் செய்து பார்த்திருக்க மாட் டார்கள். ஆனால் நடந்தது, இன்றும் ஏகாதி பத்தியத்தின் உண்மையான நிலையை நாம் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் நமக்கும் அந்த சூழல் ஏற்படும். இன்றைக்கும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்கள் ஏகாதிபத்தியத்தின் நிலையைப் புரிந்து கொண்டு போராடி வென்றெடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக ஒரே சமூகமாக ஒரே மக்களாக போராடியதுபோல் இங்கு போராட முடியுமா? ஒன்றாக நின்று ஒரே சமூகமாக நின்று இந்திய மக்கள் போராட முடியாது, சாதி இருக்கின்றவரையில்!

பார்ப்பனீயம் இருக்கின்ற வரையில் அந்தப் போராட்டத்தை அனுமதிக்காது. ஆனால், இந்த நாட்டில் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கூட பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான் முடியும். எல்லோரும் என்ன சொல்லிக்கிட்டுருக்காங்க? இன்டர்நெட் கம்ப்யூட்டரைப் பற்றி பேசும்போது எல்லாம் அமெரிக்காவில் இருக்கக்கூடிய எல்லாம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. இந்தியாவிலுள்ள எல்லா இளைஞர்களுக்கும் வேலை கிடைத்து விட்டது. இது மாபெரும் முன்னேற்றம் என் கிறார்கள். இது ஒரு மார்டன் பண்ணை அடிமை. நவீன பண்ணை அடிமை. அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு இங்கு இருந்து வேலை செய்து கொடுக்கிற ஒரு பண்ணை அடிமைத்தனம்தான். இது மீண்டும் மீண்டும் உங்களை சாதிய வலைக்குள்தான் சிக்க வைக்க முடியும். இதிலிருந்து யாரும் விடுபடலை. பெரிய கம்ப்யூட்டர் இன்சீனியரா இருக்கிறவர்கூட தன் சாதி, கோத்திரம், குலம் பார்த்து பெண் தேடு கிறார். ‘இந்து’ பத்திரிகையை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எடுத்துப் பாருங்க, தெரியும். சாதியத்தை அது வென்றெடுக்காது. ஏகாதிபத்தியத்தை நீங்க முறியடிக்க முடியாது. ஆனால், இந்த நாட்டிலுள்ள சாபக்கேடு என்ன தெரியுமா? சாதிக் கட்சிகளில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் இந்த நாட்டின் யதார்த்த சூழ்நிலையாக இருக்கக்கூடிய சாதியத்தை யும், பார்ப்பனீயத்தையும கவனிக்காத விளைவுதான் இங்கு புரட்சி ஏற்படவில்லை.
ஒரு சகோதரர் பேசும்போது சொன்னார், இந்த ‘பெரியார் திராவிடர் கழகக்’ கொடியிலுள்ள நட்சத்திரம் புரட்சியின் அடையாளம் என்று! சாதியை ஒழிக்காமல் புரட்சி நடத்த முடியாது. அம்பேத்கர் கூறுகிறார் - இந்த நாட்டில் வெறும் ஏழை பணக்காரன் பிரச்சனை மட்டும் இருக்க வில்லை. இங்கு சாதிப் பிரச்சனை இருக்கு. இங்கு சாதி இல்லாத ஒரு பாட்டாளி வர்க்கத்தைப் பார்க்க முடியாது. அதனால் உங்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியாது. அது உண்மை. சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத வர்க்கப் போராட் டமும், சாதி வர்க்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சாதீயப் போராட்டமும் வென்றெடுக்க முடியாது என்பதுதான். சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். அம்பேத்கர் வழியில்தான் போராடித் தான் வெல்ல முடியும். சாதியமே இல்லை என்று சொல்லாதீர்கள். நமக்கு நடைமுறையில் உதாரணங்கள் இருக் கின்றன.

நேபாளத்தில் சாதி இருந்தது. நேபாளத்தில் மாவோ°டுகள் போராடி அந்த கட்டமைப்பைத் தகர்த்திருக் கிறார்கள். ஈழத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. போரா டிக் கொண்டிருக்கிற நம் தமிழர்கள், சாதியத்தைக் கட்டுக் குலைத்திருக் கிறார்கள். அது நடந்துக் கொண் டிருக்கிறது.
சாதியத்தை ஒழிப்பது என்பது முடியாது என்பதல்ல. அதை போராட் டத்தின் ஊடாக முறியடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி நாம் முறியடிக்க வில்லை என்றால் மீண்டும், மீண்டும் பார்ப்பனீயத்திற்கு அடிமையாகி ஒரு சாதாரண பூணூல் அறுப்புக்குகூட 10 வருடம் சிறையிருக்கக் கூடிய நிலை தான் வந்து சேரும்.

ஆகவே, சாதியம் என்பது ஒழிக்கப் படக் கூடியது என்று கூறி முடிக்கிறேன் - என்றார் வழக்கறிஞர் பானுமதி.

தொகுப்பு : சொ. அன்பு

"புரட்சி பெரியார் முழக்கம்" என்ற மாத இதழில் வெளியானது.

No comments: